Ps John
13. கிறிஸ்துவுக்குள் உலாவும் (நடந்துகொள்ளும்) வாழ்வு
ஆகையால், நீங்கள் கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவை ஏற்றுக்கொண்டபடியே, அவருக்குள் வேர்கொண்டவர்களாகவும், அவர்மேல் கட்டப்பட்டவர்களாகவும், அவருக்குள் நடந்துகொண்டு,
(கொலோசெயர் 2:6)
கலாத்தியர் 3:27 “ஏனெனில், உங்களில் கிறிஸ்துவுக்குள்ளாக, ஞானஸ்நானம் பெற்றவர்கள் எத்தனைபேரோ அத்தனைபேரும் கிறிஸ்துவைத் தரித்துக்கொண்டீர்களே”. இந்த வசனம் மேலே சொன்ன கொலோசெயர் 2:6 வார்த்தையுடன் தொடர்புடைய வசனமாக இருக்கிறது. இதனுடைய அர்த்தம் என்னவென்றால் நீங்கள் அவருக்குள் மூழ்கியுள்ளீர்கள். ஒரு அங்கியைத் தரித்துக்கொண்டிருப்பதுபோல அவரை நீங்கள் அணிந்துள்ளீர்கள். நீங்கள் அவருக்குள் வாழ்ந்து கொண்டும், அதே நேரம் அவரைத்தரித்துக்கொண்டுமிருக்கிறீர்கள்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு விசுவாசிக்கும்பொழுது பரிசுத்த ஆவியாவரால் அவர் உங்களுக்குள் வாசம்பண்ணுகிறார். இப்பொழுது நீங்கள் மறுபடியும் பிறந்திருப்பதினால் கிறிஸ்து என்னும் சூழலுக்குள் கொண்டுவரப்பட்டு அங்கே வாசம்பண்ணுகிறீர்கள், அதற்குள் நீங்கள் உலாவுகிறீர்கள். இதையே மேலே சொன்ன வார்த்தை குறிப்பிடுகிறது.
உதாரணமாக நீங்கள் ஒரு குளிரூட்டப்பட்ட காருக்குள் பயணம் பண்ணுவீர்களானால் வெளியே உள்ள வெப்பமான சூழ்நிலை உங்களை எந்த விதத்திலும் பாதிக்காது. வெளியே நடந்து உலாவும் சாதாரண மனிதர்களுக்கும் உங்களுக்கும் வேறுபாடான சூழல் உண்டு.
இதனையே இஸ்ரவேல் ஜனங்கள் வனாந்திரத்தில் அனுபவித்தார்கள். யாத்திராகமம் 13:21,22 “அவர்கள் இரவும் பகலும் வழிநடக்கக்கூடும்படிக்கு, கர்த்தர் பகலில் அவர்களை வழிநடத்த மேகஸ்தம்பத்திலும், இரவில் அவர்களுக்கு வெளிச்சங்காட்ட அக்கினிஸ்தம்பத்திலும் அவர்களுக்கு முன் சென்றார். பகலிலே மேகஸ்தம்பமும், இரவிலே அக்கினிஸ்தம்பமும் ஜனங்களிடத்திலிருந்து விலகிப்போகவில்லை”.
இங்கே அந்த வனாந்திரத்திலே எங்கு பார்த்தாலும் கடும் வெய்யிலும் வரட்சியும் மேலோங்கி இருந்தது. ஆனால் தேவனுடைய ஜனங்களோ தேவனுடைய தெய்வீக பிரசன்னத்திலே வாசம்பண்ணினார்கள். மேகஸ்தம்பம் அவர்களை அந்த கொதிக்கும் வெய்யிலில் இருந்து பகலிலே காத்துக்கொண்டது. இரவினில் வரும் கடும் குளிரில் இருந்து காக்கும்படிக்கு அக்கினி ஸ்தம்பம் கூடவந்து அவர்களை இதமான சூழ்நிலையில் கத்துக்கொண்டது. இதுபோலவே நீங்கள் இப்பொழுது கிறிஸ்துவுக்குள் உங்கள் சொந்த இதமான சூழலில் வாசம்பண்ணுகிறீர்கள். நீங்கள் வேலைக்குப்போகும்பொழுதும் கிறிஸ்து என்றழைக்கப்படும் இதமான சூழலுக்குள் வாசம்பண்ணுகிறீர்கள். இப்படியே நீங்கள் உங்கள் வீட்டிலேயும், பாடசாலையிலேயும், உங்கள் வியாபார ஸ்தலத்திலேயும் இந்த கிறிஸ்து என்னும் சூழலுக்குள் வாசம்பண்ணுகிறீர்கள்.
இதனுடைய அர்த்தம் என்னவென்றால் உங்களை எதுவும் சேதப்படுத்தாது. இஸ்ரவேல் ஜனங்களைப்போல நீங்கள் பாதுகாக்கப்பட்டு பகலும் இரவும் கிறிஸ்துவுக்குள் இதமான பாதுகாப்பான சூழலுக்குள் வாசம்பண்ணுகிறீர்கள். தேவனுக்கே மகிமை உண்டாவதாக. எப்படிப்பட்ட அருமையான இடம். தேவனின் மகிமை இந்த சூழலுக்குள் எங்களை சூழ்ந்திருக்கிறது. அல்லேலூயா!
அறிக்கை
நான் கிறிஸ்துவுக்குள் வாசம் பண்ணுவதே என்னுடைய புதிய சூழலாக இருக்கிறது. நான் எங்கே போகிறேனோ அங்கேயெல்லாம் நான் தேவனுடைய பிரசன்னத்திலிருந்து அவருடைய பிரசன்னத்தை என்னுடனே கொண்டு செல்கிறேன். கிறிஸ்துவின் முற்றுமுழுதாக எங்களுக்காக செய்துமுடித்த அந்த இரட்சிப்பை என் குடும்பத்திலும், சுகத்திலும், என் பொருளாதரத்திலும் எனக்கு தொடபுடைய எல்லாவற்றிலும் வெளிப்படுத்துகிறேன். நான் இந்த உலகத்தை சேர்ந்தவனல்ல. வானத்திலிருந்து உண்டானவன். அல்லேலூயா!
மேலதிக வாசிப்பு
கலாத்தியர் 3:27; கொலோசெயர் 3:10; 2 கொரிந்தியர் 5:17