Ps John

மேலும் நான் உனக்குச் சொல்லுகிறேன், நீ பேதுருவாயிருக்கிறாய், இந்தக்கல்லின் மேல் என் சபையைக்கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வதில்லை. (மத்தேயு 16:18)

திருச்சபையானது இயேசு கிறிஸ்துவின் ஊழியத்தினால் உண்டான பிரதான காரியமாகும். எபேசியர் 5:30இல் நாம் அவருடைய சரீரத்தின் அவயவங்களாயும், அவருடைய மாம்சத்திற்கும் அவருடைய எலும்புகளுக்கும் உரியவர்களாயும் இருக்கிறோம்.
திருச்சபை அவருடைய சரீரமாயிருக்கிறது. “என்னுடைய சபையை நான் கட்டுவேன்” என்று அவர் குறிப்பிடும்பொழுது அவர் தன்னுடைய சரீரத்தைப் பற்றியே பேசுகிறார். அந்த சரீரம் வேறொன்றும் இல்லை. அந்த சரீரம் நீங்களும் நாங்களுமே. உலகில் உள்ள கிறிஸ்தவ சகோதர சகோதரிகள் யாவரும் அவருடைய சரீரமே.
அவர் பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டபின்பு எப்படி அவருடைய திருச்சபையை கட்டி எழுப்புகிறார்?
வேதம் சொல்கிறது எபேசியர் 4:11,12இல் மேலும் நாம் அனைவரும் தேவனுடைய குமாரனைப் பற்றும் விசுவாசத்திலும் அறிவிலும் ஒருமைப்பட்டவர்களாகி, கிறிஸ்துவினுடைய நிறைவான வளர்ச்சியின் அளவுக்குத்தக்க பூரண புருஷராகும்வரைக்கும்,
12. பரிசுத்தவான்கள் சீர்பொருந்தும்பொருட்டு, சுவிசேஷ ஊழியத்தின் வேலைக்காகவும், கிறிஸ்துவின் சரீரமாகிய சபையானது பக்திவிருத்தி அடைவதற்காகவும், 13. அவர், சிலரை அப்போஸ்தலராகவும், சிலரைத் தீர்க்கதரிசிகளாகவும், சிலரைச் சுவிசேஷகராகவும், சிலரை மேய்ப்பராகவும், போதகராகவும் ஏற்படுத்தினார். மேலே குறிப்பிட்ட ஐந்து வகையான ஊழியத்தினூடாக கிறிஸ்துவின் சபை கட்டப்பட்டு வருகிறது. அவர் தன்னுடைய சரீரமான சபையை எங்களுக்கூடாக கட்டிவருகிறார்.
நாங்கள் ஆத்துமாக்களை வென்றெடுத்து அவர்களை சபையிலே கொண்டுவந்து சேர்க்கும்பொழுது நாங்கள் தேவனுடைய மிகப்பெரிய வல்லமையான கட்டமைப்பை கட்டியெழுப்புகிறோம்.
1 இராஜாக்கள் 5 இல் நாங்கள் வாசிக்கும்பொழுது சாலமோன் இராஜா கீராம் என்பவனுக்கு செய்தி ஒன்றை அனுப்பும்பொழுது “நான் தேவனுக்கு மிகவும் பெரிதான மேன்மையான ஆலயத்தை கட்ட விரும்புகிறேன். தயவு செய்து அதற்கு தேவையான பொருட்களை (material) அனுப்பும்படி” வேண்டிக்கொண்டான். ஆனால் நீங்கள் ஒன்றை அறிவீர்களா?

தேவனுடைய இப்பொழுதுள்ள சரீரமான ஆலயம் எல்லாவற்றைப்பார்க்கிலும் மிகவும் மேன்மையானதும், மகிமை பொருந்தியதுமாக இருக்கிறது. அது நீங்களும் நானுமே.
எசாயா 62:7 இல் 7. அவர் எருசலேமை ஸ்திரப்படுத்தி, பூமியிலே அதைப் புகழ்ச்சியாக்கும்வரைக்கும் அவரை அமர்ந்திருக்கவிடாதிருங்கள்.
இந்த சரீரமான ஆலயத்தின் அங்கமாகிய நாங்கள் எங்கே வாழ்ந்தாலும் மிகவும் பலமாகவும் விசுவாசத்திலே வளர்ந்தவர்களாகவும் ஊன்றக்கட்டப்பட்டு வருகிறோம். நாளுக்கு நாள் விசுவாசத்திலே வளர்ந்து வருகிறோம். அவர் அப்போஸ்தலர் 20:32இல் இப்பொழுதும் சகோதரரே, நீங்கள் பக்திவிருத்தியடையவும், பரிசுத்தமாகப்பட்ட அனைவருக்குள்ளும் உங்களுக்குச் சுதந்தரத்தைக் கொடுக்கவும் வல்லவராயிருக்கிற தேவனுக்கும் அவருடைய கிருபையுள்ள வசனத்துக்கும் உங்களை ஒப்புக்கொடுக்கிறேன்.

அறிக்கை
நான் கிறிஸ்துவின் சரீரத்தில் அங்கமாகவும் அவருடைய எலும்பிற்கும் சதைக்கும் உரியவனாய் இருக்கிறேன். என்னுடைய விசுவாசமானது உறுதியாக கட்டப்பட்டு இந்த வாழ்வில் எதிர்கொள்ளும் எல்லா சவால்களையும் முறியடிக்ககூடியதாக இருக்கிறது. நான் இப்பொழுதும், எப்பொழுதும் மகிமையான வெற்றியை ஈட்டுகிறேன். தேவன் தன்னுடைய சரீரமான சபையை எங்களுக்கூடாக தேவ நற்செய்தியை பரப்புவதன் ஊடாக கட்டி வருகிறார். தேவனுக்கே மகிமை உண்டாவதாக.
மேலதிக வாசிப்பு
1கொரிந்தியர் 12:27; எபேசியர் 1:22-23

By Ps John