அருமையானவர்களே, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் என் வாழ்த்துகள். இன்று நாம் பார்க்கவிருக்கும் செய்தி உங்கள் வாழ்க்கையையே மாற்றப்போகிறது. இன்று பலர் கேட்கும் ஒரு கேள்வி: ” என்னிடம் பணமிருக்கிறது, வசதியிருக்கிறது, ஆனால் நிம்மதி இல்லை.” இன்று நீங்கள் ஒரு குழப்பமான மனநிலையில் இருக்கிறீர்களா? எதை நோக்கி ஓடுகிறோம் என்று தெரியாமல், உள்ளத்தில் ஒரு அமைதியற்ற சூழ்நிலை உங்களை வாட்டுகிறதா?
இந்த உலகம் தரும் அமைதி தற்காலிகமானது. ஒரு நல்ல வேலையோ, கைநிறையப் பணமோ அல்லது ஒரு மனிதரோ உங்களுக்குத் தரும் நிம்மதி தற்காலிகமானது. சூழ்நிலை மாறும்போது அந்த அமைதியும் மறைந்துவிடும். ஆனால், இயேசு தரும் சமாதானம் நிலையானது. அது எந்தவொரு சூழ்நிலையையும் சார்ந்தது அல்ல. 1 பேதுரு 5:7: “அவர் உங்களை விசாரிக்கிறவரானபடியால், உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள் , மேலும்
யோவான் 14:27-ல் ஆண்டவர் இயேசு தெளிவாகச் சொல்கிறார்: “சமாதானத்தை உங்களுக்கு வைத்துப்போகிறேன், என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன்; உலகம் கொடுக்கிறபிரகாரம் நான் உங்களுக்குக் கொடுக்கிறதில்லை; உங்கள் இருதயம் கலங்காமலும் பயப்படாமலும் இருப்பதாக.”
இயேசு உங்களுக்குக் கொடுக்கும் சமாதானம் இந்த உலகப் புத்தியைக் கடந்தது. உங்களைச் சுற்றி புயல் வீசினாலும், உங்களுக்குள் ஒரு தெய்வீக அமைதி இருக்கும். கிறிஸ்து உங்களுக்குள் வாழ்கிறார் என்றால், சமாதானத்தின் அதிபதி உங்களுக்குள் இருக்கிறார் என்று அர்த்தம். எனவே, இன்று உங்கள் கவலைகள், கண்ணீர், மற்றும் குழப்பங்கள் அனைத்தையும் இயேசுவின் பாதத்தில் இறக்கி வையுங்கள். அவர் உங்கள் இருதயத்தை ஆளுகை செய்யட்டும்.
ஜெபம்
அன்புள்ள பரலோக பிதாவே! இந்த அருமையான வேளைக்காக உமக்கு நன்றி செலுத்துகிறோம். உம்முடைய வார்த்தையைக் கேட்ட நாங்கள், எங்களுடைய சகல கவலைகளையும், பாரங்களையும், குழப்பங்களையும் உமது பாதத்தில் முழுமையாக இறக்கிவைக்கிறோம்.
உலகம் தராத, எமது புத்திக்கு எட்டாத உமது தெய்வீக சமாதானத்தால் எங்கள் இருதயங்களை நிரப்புவீராக. எங்களைச் சூழ்ந்துள்ள எந்தவொரு புயலையும், பிரச்சனைகளையும் எதிர்கொள்ளக்கூடிய பலத்தையும், அமைதியையும் இந்த நொடியே எங்களுக்குத் தருகிறீர் என்பதற்காக உமக்கு ஸ்தோத்திரம்.
இன்றிலிருந்து எங்கள் வாழ்க்கையை உமது சமாதானம் ஆளுகை செய்யட்டும். நாங்கள் எதைைக் குறித்தும் கவலைப்படாமல், உம்மோடுள்ள ஐக்கியத்தில் நிலைத்திருந்து வெற்றிகரமான வாழ்க்கையை வாழ எங்களை ஒப்புக்கொடுக்கிறோம்.
இயேசுவின் நாமத்தினாலே ஜெபிக்கிறோம் எங்கள் நல்ல பிதாவே, ஆமென்!