விஷேசித்த பொக்கிஷத்தை உங்களுக்குள் கொண்டிருக்கிறீர்கள்

ந்த மகத்துவமுள்ள வல்லமை எங்களால் உண்டாயிராமல், தேவனால் உண்டாயிருக்கிறதென்று விளங்கும்படி, இந்தப் பொக்கிஷத்தை மண்பாண்டங்களில் பெற்றிருக்கிறோம். 2 கொரிந்தியர் 4:7

மேலே குறிப்பிட்ட வசனம் குறிப்பாக கிறிஸ்தவர்களுக்கு (மறுபடியும் பிறந்தவர்களுக்கு) எழுதப்பட்டது. ஆகையால் இந்த வசனம் உங்களை நோக்கி பேசுகிறது. என்னவென்றால் விலையேறப்பெற்ற இந்த பொக்கிஷம் உங்களுக்குள்ளே இருக்கிறது. தேவனுடைய தெய்வீகத்தை உங்களுக்குள்ளே வைத்து, அதை சுமக்கிற நீங்கள் சாதாரண மனிதர்கள் அல்ல. இதை அறிந்து கொள்ளுங்கள். ஏனெனில் வேதம் சொல்கிறது பிலமோன் 1:6இல் “உங்களிலுள்ள சகல நன்மைகளும் தெரியப்படுகிறதினாலே உம்முடைய விசுவாசத்தின் அந்நியோந்நியம் கிறிஸ்து இயேசுவுக்காகப் பயன்படவேண்டுமென்று வேண்டுதல் செய்கிறேன்.” ( That the communication of thy faith may become effectual by the acknowledging of every good thing which is in you in Christ Jesus.

கிறிஸ்து இயேசுவுக்குள் உங்களுக்குள்ளே ஏற்கனவே இருக்கின்ற எல்லா நன்மையான காரியங்களையும்நீங்கள் வேத வசனத்தின்படி அறிந்து, அதை ஏற்றுக்கொண்டு அதனை உங்களுடைய விசுவாச வார்த்தையினால் தெரியப்படுத்துகிறதினால் அது உங்களுக்கு பிரயோசனப்படுகிறது. 

நீங்கள் தேவ ஒழுங்கை (Divine order) கொண்டிருப்பவர்கள் என்றும், தேவ பிரசன்னத்தை சுமக்கிறவர்கள் என்றும் அறிந்து அந்த சிந்தை உடையவர்களாக இருங்கள். ஆகையால் தேவனுடைய மேன்மையான வல்லமை உங்களுக்கூடாக புறப்பட்டு நீங்கள் செய்யும் எல்லா காரியங்களிலேயும் செழிப்பை, வெற்றியை கொண்டு வருகிறது. தேவனுக்கே மகிமை உண்டாவதாக. வேதம் சொல்கிறது “கிறிஸ்துவானவர் தமது மகிமையின் நம்பிக்கையாக உங்களுக்குள் வாசம்பண்ணுவதே அந்த பரம இரகசியம்” (கொலேசெயர் 1:27)

உங்கள் வாழ்க்கை வெறுமையாக அல்ல; உங்களுக்குள்ளே ஒரு பொக்கிஷம் இருக்கிறது. அந்த பொக்கிஷத்திற்குள் வல்லமை, அன்பு, வெளிச்சம், மற்றும் தேவ பரிபூரணம் நிறைந்திருக்கிறது. 

உங்கள் சரீரம் ஒரு மட்பாண்டமாக இருக்கலாம், ஆனால் தேவ மகிமை உங்கள் ஆவியிலே இருக்கிறது. அந்த மகிமை உங்கள் மாம்ச சரீரத்தை பூரணப்படுத்துகிறது. 

உங்களது உலகத்திற்கு நீங்களே தேவனுடைய வெளிச்சத்தை, அவருடைய மகிமையை, வல்லமையை, மற்றும் கிருபையை வெளிப்படுத்துகிறவர்கள் என்று எப்பொழுதும் உங்களுக்குள் உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள் (Affirm). 

மேலே குறிப்பிட்ட விசுவாச அறிக்கையை அடிக்கடி வெளிப்படுத்துங்கள். ஏனென்றால் தேவனுடைய வார்த்தையின் வல்லமையானது தேவனுடைய வார்த்தையை நீங்கள் கேட்டு, அதனோடு உடன்பட்டு அதனையே பேசும்பொழுது (Response) அது உங்கள் வாழ்க்கையிலே மாறுதலை உருவாக்குகிறது. 

ஆரம்பத்தில் குறிப்பிட்ட வசனத்தை நாங்கள் வாசிக்கும்பொழுது, எங்களுடைய (Response) பதிலளிப்பு எப்படி இருக்கவேண்டும் என்றால் “ஆம் நான் தேவனைச் சுமக்கும் ஒரு பாத்திரம்; நான் தெய்வீக ஆசீர்வாதங்களையும், பொக்கிஷங்களையும் எனக்குள்ளே கொண்டிருக்கிறேன்”. அல்லேலூயா!

அறிக்கை

கிறிஸ்து எனக்குள் இருக்கிறார்; அவருடைய பரிபூரணம் என் ஆவியில் இருக்கிறது. தேவனுடைய ஜீவனும் மகிமையும் எனக்குள்ளேயும், எனக்கூடாகவும் வெளிப்படுகிறது. நான் என்னுடைய ஆவிக்குள்ளே இருக்கும் பொக்கிஷங்களை அறிந்து என்னுடைய விசுவாச அறிக்கையினாலே அவற்றை வெளியில் கொண்டு வருகிறேன். நான் செய்யும் எல்லா வேலைகளிலும் மேன்மையை, பரிபூரணத்தை வெளிக்கொண்டு வருகிறேன். நான் அன்பினால் நிறைந்திருக்கிறேன். என்னுடைய உலகத்தில் தேவனுடைய நன்மைகளையும், கருணையையும், அழகையும் மற்றும் கிருபையையும் வெளிப்படுத்துகிறேன். அல்லேலூயா!

மேலதிக வாசிப்பு: 

லுக்கா 6:45; கொலேசயர் 1:27; 1 யோவான் 4:4