ஆகையால் ஒருவன் இவைகளைவிட்டு, தன்னைச் சுத்திகரித்துக்கொண்டால், அவன் பரிசுத்தமாக்கப்பட்டதும் எஜமானுக்கு உபயோகமானதும், எந்த நற்கிரியைக்கும் ஆயத்தமாக்கப்பட்டதுமான கனத்துக்குரிய பாத்திரமாயிருப்பான்.
(2 தீமெத்தெயு 2:21)
நீங்கள் கிறிஸ்தவனாக இருப்பதினால் கிறிஸ்துவின் நற்செய்தியை போதிப்பதற்கு தேவனால் அங்கீகாரம் பெற்றுள்ளீர்கள். இந்த நற்செய்தியானது முழு உலகத்தையும் மீட்கும் வல்லமையுள்ளதாய் இருக்கிறது.
வேதம் சொல்கிறது 1கொரிந்தியர் 1:5. “நீங்கள் இயேசுகிறிஸ்துவுக்குள்ளாய் எல்லா உபதேசத்திலும் எல்லா அறிவிலும், மற்றெல்லாவற்றிலும், சம்பூரணமுள்ளவர்களாக்கப்பட்டிருக்கிறபடியால்” நீங்கள் எல்லாவிதத்திலும் நற்செய்தியை அறிவிப்பதற்கு தகுதிப்படுத்தப்பட்டிருக்கிறீர்கள். ஆனாலும் அபிஷேகம் பண்ணப்பட்ட போதகராகிய நீங்கள் உங்கள் தனிப்பட்ட வாழ்விலும், எப்பொழுதும் மேன்மையான சிந்தையுள்ளவர்களாகவும், சூழ்நிலைகளை நன்மைக்கேற்றவிதமாக மாற்றுகிறவர்களாகவும் இருக்கவேண்டும்.
மேலே சொன்ன வசனத்திலே “சுத்திகரிப்பு” என்பதின்ப் அர்த்தம் உலக காரியங்கள், சிந்தைகள், மனித தத்துவங்கள், போன்ற கார்யங்களில் இருந்து எங்களை வேறுபிரித்து தேவனுடைய பரிசுத்த ஊழியத்திற்கு எங்களை எப்பொழுதும் தகுதியாக வைத்திருப்பதாகும்.
எமது மனதும், இருதயமும் வார்த்தையினால் புதிப்பிக்கப்படாமலும், சுத்திகரிக்கப்படாமலும் இருந்தால் எங்கள் உபதேசம் வலுவிழந்துபோகும். மனம் புதிதாகாமல் மறுரூபம் இல்லை. மனதை புதிப்பிக்காமல் ஊழியம் செய்வோமானால் அதி சீக்கிரத்தில் சாதாரண மனிதனுடைய சுபாவம் கிறிஸ்துவின் சுபாவத்தை பின்தள்ளி, மறுரூபப்படாத மனிதனின் சுபாவத்தை (அசிங்கமும், பொல்லாததும்) வெளிப்படுத்தும்.
ஆகவேதான் எங்களை முற்றுமுழுதாக தேவனுடைய வார்த்தைக்கு ஒப்புக்கொடுக்கும்பொழுது எங்கள் வாழ்வும், எங்கள் சுபாவமும் மாற்றம் பெறுகிறது. யாருமே கனவீனமான பாத்திரமாக இருப்பதற்கு இங்கே பிறக்கவில்லை. ஒவ்வொருவரும் தேவனுடைய மகிமையை சுமக்கும் பாத்திரங்களாக இருப்பதற்கே பிறந்திருக்கிறார்கள். ஆனால் நீங்கள் மகிமையை சுமக்கும் கனமான பாத்திரமா? அல்லது கனவீனமான பாத்திரமா? என்பதை நீங்களே முடிவு செய்யவேண்டும். அது நீங்கள் வாழும் வாழ்விலும் உங்கள் தெரிவிலேயுமே இருக்கிறது.
ஆனாலும் தேவனுக்கே மகிமை உண்டாவதாக. அவர் எங்கள் ஒவ்வொருவரையும் மெய்யான நீதியிலும், மெய்யான பரிசுத்தத்திலும் எங்கள் வாழ்க்கையை நடத்தி செல்லும்படிக்கு எங்களை தகுதிப்படுத்தியிருக்கிறார்.
புதிய உடன்படிக்கையின் ஊழியக்காரராக இருக்கும்படிக்கு அவரே எங்களை தகுதிப்படுத்தியிருக்கிறார். 2 கொரிந்தியர் 3:6. புது உடன்படிக்கையின் ஊழியக்காரராயிருக்கும்படி, அவரே எங்களைத் தகுதியுள்ளவர்களாக்கினார்; அந்த உடன்படிக்கை எழுத்திற்குரியதாயிராமல், ஆவிக்குரியதாயிருக்கிறது; எழுத்து கொல்லுகிறது, ஆவியோ உயிர்ப்பிக்கிறது.
ஆகையினால் தேவனுடைய பரம அழைப்பிற்கு பங்குள்ளவர்களாகவும், பாத்திரராகவும் நடந்து கொள்ளுவோம்.
ஜெபம்
அன்பின் பரலோகத் தகப்பனே!
உம்முடைய ஒப்புரவாக்குதலின் ஊழியத்திற்கு பங்குள்ளவர்களாக எங்களை அழைத்ததற்காக உமக்கு நன்றிகள். உம்முடைய வார்த்தையினாலும், ஆவியினாலும் என்னை சுத்திகரித்து உம்முடைய விருப்பத்தையும், செயல்களையும் என்னுடைய வாழ்விலே நிறைவேறுவதற்காக மிக்க நன்றிகள். நான் என்னுடைய வாழ்வை மெய்யான நீதியிலும், பரிசுத்ததிலும் வாழ்வதினால் பலரையும் இந்த மகிமை பொருந்திய வாழ்வுக்குள் என்னுடைய வார்த்தையினாலும், என்னுடைய சுபாவத்தினாலும் கொண்டுவந்து சேர்க்கிறேன். இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே ஆமேன்!
மேலதிக வாசிப்பு
எபிரேயர் 10:10; கொலோசெயர் 1:12; 1 கொரிந்தியர் 6:19-20