Pastor Mahen

கர்த்தரோ அவரை நொறுக்கச் சித்தமாகி, அவரைப் பாடுகளுக்குட்படுத்தினார்; அவருடைய ஆத்துமா தன்னைக் குற்றநிவாரணபலியாக ஒப்புக்கொடுக்கும்போது, அவர் தமது சந்ததியைக் கண்டு, நீடித்தநாளாயிருப்பார், கர்த்தருக்குச் சித்தமானது அவர் கையினால் வாய்க்கும். (ஏசாயா 53 :10 )

தேவனாகிய இயேசு கிறிஸ்து சிலுவையில் அவமானத்தையும் வேதனையையும் அனுபவித்தது அவருடைய பாவங்களுக்காக அல்ல, அவர் எங்களுக்காகவே எங்கள் பாவப்பட்ட இடத்தை எடுத்து நாங்கள் படவேண்டிய வேதனையை, பாடுகளை அனுபவித்தார்.

எங்களுடைய பாவங்களை தன் மேல் சுமந்து சிலுவையில் தொங்கும்போது ஒரு கட்டத்தில் அவர் தேவனை நோக்கி சத்தமிட்டார். “ ஏலோயீ! எலோயீ! லாமா சபக்தானி. இது என்னவென்றால் என் தேவனே, என் தேவனே ஏன் என்னை கைவிட்டீர். ( மாற்று 15: 34) தேவன் தம்முடைய முகத்தை இயேசுவுக்கு மறைத்தார். ஏனென்றால் எங்களுடைய பாவங்கள் அவர்மேல் சுமத்தப்பட்டதால். ஆபாகூக் 1:13 எங்களுக்கு சொல்லுகிறது தேவன் பரிசுத்தமானவர் எமது அக்கிரமத்தை பார்க்கக்கூடாத சுத்தகண்ணனாயிருக்கிறார்.

இதை எதிர்பார்த்துதான் கெத்சமனே தோட்டத்தில் இயேசு ஜெபம் செய்தார். “ சற்று அப்புறம்போய், முகங்குப்புற விழுந்து: என் பிதாவே, இந்தப்பாத்திரம் என்னைவிட்டு நீங்கக்கூடுமானால் நீங்கும்படிசெய்யும்; ஆகிலும் என் சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது” என்று ஜெபம்பண்ணினார். ( மத்தேயு 26:39)
வேதம் குறிப்பாக பதிவு செய்வது என்னவென்றால் அவரது உடலிலிருந்து பெரிய வேர்வைத்துளிகள் இரத்தத்தை போல வழிந்தது.
அத்தகைய வேதனையுடனும், ஆத்மாவின் பதைபதைப்புடனும் அவர் ஜெபித்தார். தனது தந்தையோடு உள்ள உறவிலிருந்து துண்டிக்கப்படுவதை அவர் கொஞ்சமும் விரும்பவில்லை. ஏனென்றால் அவர் தனது தந்தையை மிக அதிகமாக நேசித்தார். ஆனால் பிதாவோ இயேசுவை உலகத்தின் பாவங்களை சுமந்து தீர்க்கும் பலியாக ஒப்புக்கொடுக்க தீர்மானித்தார்.
எனவே இயேசு சிலுவையிலே மரித்து, பாதாளத்திற்கு கடந்து சென்று, எங்கள் சார்பாக நரகத்திலே தேவனால் தண்டிக்கப்பட்டார். அவர் நரகத்திற்கு வெறுமனே செல்லவில்லை. மாறாக மேற்சொன்ன வசனத்தின்படி வேதனையில் உத்தரித்தார்.

இதை தேவனே நடப்பித்தார். ஏனெனில் எங்களை வேதனையில் இருந்து மீட்டுக்கொள்ளும்படிக்கே.
எல்லா தண்டனைகளையும் அவர் ஏற்றுக்கொண்ட பின்பு, வேதம் சொல்கிறது அவர் ஆவியிலே நீதியுள்ளவராக (குற்றமற்றவராக) காணப்பட்டார். (1 தீமெத்தேயு 3:16)
இன்று, அவர் எங்கள் பிரதிநிதியாக எல்லா வேதனைகளையும் அனுபவித்து, பலிகளையும் நிறைவேற்றினபடியால் பாவமும் அதன் விளைவுகளும் எங்களை இனிமேல் ஆளுகை செய்ய முடியாது.
வேதம் சொல்லுகிறது அவருக்கூடாக நாங்கள் நியாயப்படுத்தப்பட்டு, நீதிமானாக தீர்க்கப்பட்டிருக்கிறோம். இப்பொழுதோ நாங்கள் தேவ ஊழியத்தை விடுதலையோடும், மிகுந்த களிப்போடும் அவருடைய பிரசன்னத்தில் நிரந்தரமாய் செய்வதற்கு தகுதிப்படுத்தப்பட்டிருக்கிறோம். ஏனென்றால் இவையெல்லாம் இயேசு கிறிஸ்துவினால் எங்களுக்கு உண்டாயிருக்கிறது.

ஜெபம்

அன்பின் தகப்பனே! இயேசு கிறிஸ்துவை எங்கள் பிரதிநிதியாக, எங்கள் மரணத்தை ருசிக்கும்படி அனுப்பி, எங்கள் பாவங்களுக்காக முழுத்தண்டனையையும் (full) செலுத்தி, எங்களை முற்றுமுழுமையாக விடுதலை செய்ததற்காக உமக்கு நன்றி. இயேசு கிறிஸ்துவை எங்கள் பாவங்களுக்கான விலைமதிப்பற்ற பலியாக அனுப்பியதை நாங்கள் அறிந்து கொள்ளுபொழுது உமக்கு முன்பாக மிகுந்த சந்தோசத்தோடும், குற்றமற்றவனாக, நீதிமானாக உம்முடைய பிரசன்னத்திலே இப்பொழுதே நிலைநிற்கிறோம். இந்த நீதியென்னும் புதிய வாழ்வுக்குள் எங்களை அழைத்து வந்ததற்காக இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே உமக்கு நன்றிகள். ஆமென்!

மேலதிக வேத வாசிப்பு:
ரோமர் 5:8-10; 2 கொரிந்தியர் 5:21

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *