Pastor Mahen
பாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன்.
(ரோமர் 6:23)
இயேசு கிறிஸ்து கிறிஸ்தவர்களுக்காக மரிக்கவில்லை என்று நாம் சொல்லும்பொழுது சிலர் அதை புரிந்து கொள்வதில்லை. இரட்சிப்பு கிறிஸ்தவர்களுக்காக அவர் கொண்டுவரவில்லை, அது உலகில் வாழும் சகல மனிதர்களுக்கும் கொண்டுவரப்பட்டது. எவர்கள் விசுவாசிக்கிறார்களோ அவர்கள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை தமது சொந்த இரட்சகர் என்று அறிக்கைபண்ணும்பொழுது அவர்கள் கிறிஸ்தவர்களாக புதிதாக பிறக்கிறார்கள். தேவனுடைய சிந்தையிலே முழு உலகுமே சட்டரீதியாக இயேசு கிறிஸ்துவினால் மீட்க்கப்பட்டுள்ளது. ஏனெனில் அவர் ஒவ்வொரு மனிதனுடைய பாவத்திற்குமான கிரயத்தை செலுத்தி, ஒவ்வொருவரும் நித்திய ஜீவனை பெற்றுக்கொள்ளுவதை சாத்தியமாக்கியுள்ளார். ஆனாலும் ஒவ்வொருத்தரும் இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கும்பொழுது தமக்கான இரட்சிப்பை செயல்படுத்தியுள்ளார்கள்.
பலர் இந்த சத்தியத்தை அறியாதபடியினால் இன்னமும் இருட்டினிலே நடந்து கொண்டு, தெய்வீக வாழ்க்கை வாழ்வதற்குப் பதிலாக சாதாரண வீழ்ந்துபோன மனிதனைப் போல வாழ்கிறார்கள். ரோமர் 10:9-10 இல் நாம் எப்படி நமது இரட்சிப்பை செயல்படுத்தி மகிமையுள்ள நித்திய ஜீவனை பெற்றுக்கொள்ளலாம் என்று காண்பிக்கின்றது. ரோமர் 10:9-10 என்னவென்றால், கர்த்தராகிய இயேசுவை நீ உன் வாயினாலே அறிக்கையிட்டு, தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று உன் இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய்.
10. நீதியுண்டாக இருதயத்திலே விசுவாசிக்கப்படும், இரட்சிப்புண்டாக வாயினாலே அறிக்கைபண்ணப்படும்.
இதற்காகவேதான் அவர் எங்களை நற்செய்தியை உலகம் முழுவதும் போதிக்கும்படிக்கு அனுப்பியுள்ளார். உலகம் இந்த நற்செய்தியை கற்றுக்கொள்ளும்பொழுது கிறிஸ்துவுக்குள் தமக்கு தயார்படுத்தப்பட்டிருக்கும் நித்திய ஜீவனை பெற்று
அந்த மேன்மையான வாழ்க்கையை வாழ்வதற்கு ஆரம்பிக்கிறார்கள். சாதாரண மனிதனுடைய வாழ்க்கையானது வரவர தேய்ந்துபோவதும் உடைந்துபோனதுமான வாழ்வாக இருப்பதை தேவன் அறிந்து, அதனை தேவ ரகமான வாழ்வினாலே மாற்றீடு செய்திருக்கிறார். இதனாலே சாதாரண மனிதனுடைய வாழ்க்கை அசாதாரணமாகவும், அழிவுள்ள வாழ்வு நித்திய ஜீவனைக்கொண்ட அழியாமையுள்ள வாழ்வாகவும், தேவசுபாவத்தையும் கொண்டுள்ளது.
யோவான் 3:16 இல் 16. தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார். மேலே குறிப்பிட்ட நித்திய ஜீவனே தேவனுடைய ஜீவனாக இருக்கிறது. இதனை விசுவாசிக்கிற எவரும் பெற்றுக்கொள்ளும்படியாக இருக்கிறது. ரோமர் 10:9-10 இன்படி நீங்கள் விசுவாசித்து, வாயினாலே அறிக்கைபண்ணும்பொழுது அந்தக்கணமே பழைய மனிதனில் இருந்த பாவமும் மரணமும் ஆளுகை செய்கிற ஜீவன் அகற்றப்பட்டு, தேவனுடைய நித்திய ஜீவன் ஊற்றப்படுகிறது. இப்படியே கிறிஸ்துவுக்குள் புதிய மனிதன் பிறக்கின்றான்.
தேவனுக்கே மகிமை உண்டாவதாக!
ஜெபம்
அன்பின் தகப்பனே!
இலவசமாக தந்த இரட்சிப்பிற்கும் அதனோடுகூட நான் இப்பொழுதே அனுபவிக்கும்படி தந்த ஆசீர்வாதங்களுக்கும் மிக்க நன்றி. அதுமாத்திரம்மல்ல மற்ற ஜனங்களையும் இந்த ஆசீர்வாதிற்குள் பங்கடையும்படிக்கு உம்மோடு, ஒன்றிணைந்த ஐக்கியமான வாழ்விற்கு அழைத்து வரும்படிக்கும் என்னை நியமித்ததற்காக மிக்க நன்றி. இந்த ஜீவன் என்னுடைய ஒவ்வொரு பகுதியிலும் இப்பொழுதே வேலை செய்கிறது. அது என்னில் இருந்து மரணம், வியாதிகள் நோய்கள், மற்றும் உமது நற்செய்திக்கு ஏற்பில்லாத எல்லா காரணிகளையும் விரட்டியடிக்கிறதாக இருக்கிறது. இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே ஆமேன்!
மேலதிக வாசிப்பு
ரோமர் 5:15-18; ரோமர் 6:23