Pastor John
தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.
(யோவான் 3:16)
எப்படி நீங்கள் இரட்சிக்கப்பட்டீர்கள்? என்று கேள்வி எழுப்பும்பொழுது பலர் “என் பாவங்களை அறிக்கையிட்டேன்” என்று பதிலளிப்பார்கள். ஆனால் அது வேதத்தின் வழிமுறை அல்ல. உங்கள் பாவங்களை அறிக்கையிடுவதினால் நீங்கள் இரட்சிப்படைவதில்லை. மாறாக கர்த்தராகிய இயேசுவை உங்கள் வாழ்வின் ஆண்டவர் என்று அறிக்கைபண்ணும் பொழுது மாத்திரமே நீங்கள் இரட்சிக்கப்படுகிறீர்கள். வேதத்தில் எந்த இடத்திலேயும் உங்கள் பாவங்களை அறிக்கையிடுவதினால் நீங்கள் இரட்சிக்கப்படுவீர்கள் என்று எழுதியிருக்கவில்லை. அத்தோடு நீங்கள் செய்த எல்லா பாவங்களையும் மறக்காமல் அறிக்கைபண்ணுவது என்பது முடியாத காரியம்.
உங்களுக்கு தேவையானது ஒன்றே, அது என்னவென்றால் நீங்கள் மறுபடியும் புதிய சிருஷ்டியாக பிறக்கவேண்டும். அதற்கு நீங்கள் உங்கள் வாயினாலே கர்த்தராகிய இயேசுவை ஆண்டவர் என்று அறிக்கைபண்ணி, தேவன் அவரை உயிரோடு எழுப்பினார் என்று இருதயத்தில் விசுவாசிக்கும்பொழுது நீங்கள் மறுபடியும் பிறக்கிறீர்கள். ரோமர் 10:9-10 இன்படி “என்னவென்றால், கர்த்தராகிய இயேசுவை நீ உன் வாயினாலே அறிக்கையிட்டு, தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று உன் இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய். 10. நீதியுண்டாக இருதயத்திலே விசுவாசிக்கப்படும், இரட்சிப்புண்டாக வாயினாலே அறிக்கைபண்ணப்படும்”. இதுவே எங்களை புதிய சிருஷ்டியாக மாற்றுகிறது.
சவுல் என்பவனின் இரட்சிப்பின் வரலாறு மிகவும் ஆச்சரியமாகவும் பிரமிப்பாகவும் இருக்கிறது. அப்போஸ்தலர் 9 இல் சவுல் இரட்சிக்கப்படமுன்பு ஆதித் திருச்சபைகளை அழிப்பதற்கும், துன்புறுத்துவதற்கும் மூர்க்க வெறிகொண்டு அலைந்தான். ஆனாலோ அவன் இயேசு கிறிஸ்துவை சந்தித்தபொழுதிலிருந்து முற்றுமுழுதாக மாறினான். இதனை
1தீமெத்தேயு 1:13இல் “முன்னே நான் தூஷிக்கிறவனும், துன்பப்படுத்துகிறவனும், கொடுமை செய்கிறவனுமாயிருந்தேன்; அப்படியிருந்தும், நான் அறியாமல் அவிசுவாசத்தினாலே அப்படிச்செய்தபடியினால் இரக்கம்பெற்றேன்”. என்று விளக்கமாக தெரிவித்திருந்தான். அவன் இரட்சிக்கப்பட்ட விதமானது ரோமர் 10:9-10 இல் உள்ள நியமத்தின்படியே உண்டாயிற்று.
அப்போஸ்தலர் 8:35-39 இல் எத்தியோப்பியன் ஈனோக்கை அப்போஸ்தலர் பிலிப்பு இரட்சிப்பிற்குள் வழிநடத்தும்பொழுது அவனுடைய பாவங்களை அறிக்கை செய்யும்படி கூறாமல் இயேசு கிறிஸ்துமேல் உள்ள விசுவாசத்தையே அறிக்கை செய்ய வைத்தான்.
ஆனபடியினால் நாங்கள் ஜனங்களை இரட்சிப்பிற்குள் நடாத்தும்பொழுது கர்த்தராகிய இயேசுவே தங்கள் வாழ்விற்கு ஆண்டவர் என்று அறிக்கைபண்ண வைக்கவேண்டும்.
ஜெபம்
அன்பின் தகப்பனே! கிறிஸ்துவின் நற்செய்தியை நான் விசுவாசித்து பெற்றுக்கொள்ளுவதற்கு நீர் பாராட்டிய கிருபைக்காக மிக்க நன்றி. இந்த கிறிஸ்துவின் நற்செய்தியே விசுவாசிக்கிற எவர்களையும் இரட்சிப்பதற்கு தேவனுடைய பெலமாக இருக்கிறது. நான் உம்முடைய திவ்ய சுபாவத்திற்கு பங்குள்ளவனாகவும், உம்முடைய தெய்வீக அனுபவத்தை பகிர்ந்தளிப்பவனாகவும், இரட்சிக்கபடாதவர்களை உம்முடைய நீதியின் மகிமையிலே கொண்டு வந்து சேர்க்கும் உடன் வேலையாளாகவும் இருக்கிறேன். இந்த மேலான ஆசீர்வாதத்திற்கும், அந்தஸ்திற்கும் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே மிக்க நன்றி. ஆமேன்!
மேலதிக வாசிப்பு
1கொரிந்தியர் 1:18; ரோமர் 1:16-17; ரோமர் 10:13