நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம் பண்ணுங்கள். (மத்தேயு 5:44)

சில கிறிஸ்தவர்கள் “எதிரியை இல்லாமல் ஒழிக்கும் ஆராதனை” என்ற தலைப்பில் அவர்கள் கற்பனைபண்ணும் எதிரிக்காக ஜெபம் செய்கிறார்கள். ஆனால் அது தேவ வசனத்திற்கு ஏற்புடையது அல்ல. தேவனுடைய வார்த்தை மேலே குறிப்பிட்டபடி “உங்கள் எதிரியை அன்பு கூருங்கள்” என்று தெளிவாக சொல்லுகிறது.

தேவன் உங்களை நோக்கி எவற்றை செய்யவேண்டும் என்று சொல்லுகிறாரோ அது உங்கள் நன்மைக்கே. அவர் உங்கள் எதிரிகளை நேசியுங்கள் என்று சொல்வாரேயானால், அதன் அர்த்தம் உங்களால் எதிரியை நேசிக்க முடியும் என்பதெ. அதுமட்டுமல்ல, அது உங்களுக்கு அனுகூலமாகவும் இருக்கும். ஆகவே நீங்கள் தேவ வார்த்தையின்படி செய்யுங்கள்.

மேலும் வேத வசனம் காண்பிக்கிறது உங்கள் எதிரி மாம்சத்திலோ அல்லது இரத்தத்திலோ அல்ல. எபேசியர் 6:12இல் “ஏனெனில், மாம்சத்தோடும் இரத்தத்தோடுமல்ல, துரைத்தனங்களோடும், அதிகாரங்களோடும், இப்பிரபஞ்சத்தின் அந்தகார லோகாதிபதிகளோடும், வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் நமக்குப் போராட்டம் உண்டு”.

 

தங்கள் எதிரிக்கு எதிராக ஜெபம் செய்யும் கிறிஸ்தவர்கள் முக்கியமாக பயத்தின் நிமித்தமாகவும் மற்றும்  பாதுகாப்பின்மை என்று தவறாக எண்ணுவதினாலும் செய்கிறார்கள். 

அது அவர்களுடைய அறியாமையின் வெளிப்பாடாகும். 

கர்த்தராகிய இயேசு கிறிஸ்து உங்கள் ஆண்டவராக, உங்கள் மேய்ப்பராக உங்கள் வாழ்வுக்கு இருப்பாரேயானால் நீங்கள் எதைக்குறித்தும், ஒன்றைக்குறித்தும் பயப்படவேண்டிய அவசியம் இல்லை. தாவீது இதனை நன்கு அறிந்திருந்தான். சங்கீதம் 27:1 இல் அதனை வெளிப்படுத்துகிறான். “கர்த்தர் என் வெளிச்சமும் என் இரட்சிப்புமானவர், யாருக்குப் பயப்படுவேன்? கர்த்தர் என் ஜீவனின் பெலனானவர், யாருக்கு அஞ்சுவேன்?” இந்த சிந்தை உள்ளவர்களாக இருங்கள்.

சாலொமோன் இராஜா தேவனோடு உரையாடும்பொழுது, 2:நாளாகம் 1:7இல்  “அன்று ராத்திரியிலே தேவன் சாலொமோனுக்குத் தரிசனமாகி: நீ விரும்புகிறதை என்னிடத்தில் கேள் என்றார்”. அதற்கு சாலொமோன் ஞானத்தையும் அறிவையும் தரும்படி வேண்டிக்கொண்டான்.

 

2:நாளாகம் 1:11. அப்பொழுது தேவன் சாலொமோனை நோக்கி: இந்த விருப்பம் உன் இருதயத்தில் இருந்தபடியாலும், நீ ஐசுவரியத்தையும் சம்பத்தையும் கனத்தையும், உன் பகைஞரின் பிராணனையும், நீடித்த ஆயுசையும் கேளாமல், நான் உன்னை அரசாளப்பண்ணின என் ஜனத்தை நியாயம் விசாரிக்கத்தக்க ஞானத்தையும் விவேகத்தையும் நீ கேட்டபடியினாலும்,
12. ஞானமும் விவேகமும் தந்திருக்கிறதுமல்லாமல், உனக்குமுன் இருந்த ராஜாக்களுக்காகிலும் உனக்குப்பின் இருக்கும் ராஜாக்களுக்காகிலும் இல்லாத ஐசுவரியத்தையும் சம்பத்தையும் கனத்தையும் உனக்குத் தருவேன் என்றார்.

இந்த வசனம் எங்களுக்கு வழிகாட்டியாக இருக்கிறது. சாலொமோன் தன்னுடைய எதிரிகளின் அழிவை வேண்டிக்கொள்ளாததை குறித்து தேவன் அவனை மெச்சி பாராட்டினார். 

தேவ ஆவியானவருடைய வாஞ்சையானது உங்கள் எதிரிகளும் இரட்சிக்கப்படவேண்டும் என்பதே. உங்கள் எதிரிகள் மனம்திரும்பவில்லை என்றால் அவர்கள் ஏற்கனவே தேவனோடு முரண்படுகிறார்கள். ஆனாலும் உங்கள் பொறுப்பு என்னவென்றால் அவர்களுக்காக பரிந்து பேசும் ஜெபத்தினூடாகவும், தேவ வார்த்தைகளுக்கூடாகவும் அவர்களை இரட்சிப்புக்குள் நடாத்துவதே.