“கிறிஸ்துவுக்குள் எப்பொழுதும் எங்களை வெற்றிசிறக்கப்பண்ணி, எல்லா இடங்களிலேயும் எங்களைக்கொண்டு அவரை அறிகிற அறிவின் வாசனையை வெளிப்படுத்துகிற தேவனுக்கு ஸ்தோத்திரம். (II கொரிந்தியர் 2:14)”.
உலகளாவிய ரீதியில் பார்க்கும்பொழுது தேவனுடைய திருச்சபைகளே அனேக எதிர்ப்புக்களுக்கும் தாக்குதல்களுக்கும் உண்டாயிருக்கிறது. அதற்கான காரணமானது பிசாசானவன் தனக்கு வரப்போகும் நிரந்தரமான தண்டனைக்குப்பயந்து ஜனங்களின் இருதயத்திலே பயத்தை விதைத்து வருகிறான். ஆனாலும் அவன் முற்றுமுழுதாக தோற்றுப்போனவன். மேன்மையான காரியங்கள் இயேசு கிறிஸ்துவின் திருச்சபையிலே இப்பொழுது நடைபெற்று வருகிறது. பிசாசானவனால் அவற்றை தடுத்து நிறுத்த முடியவில்லை. எங்கள் திருச்சபைகளிலே இப்பொழுது நடைபெற்று வருகிற அற்புத, அடையாளங்கள் உலகத்திலே உண்டாயிருக்கிற தொழில் நுட்பம், விஞ்ஞானம் மற்றும் அரசியலில் நடைபெறுகின்ற மாற்றங்களை பார்க்கிலும் மிகவும் பெரிதாக இருக்கிறது.
மத்தேயு 16:18 இல் இயேசு கிறிஸ்து சொன்னார் “….. என் சபையை நான் கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வதில்லை”. இங்கே குறிப்பிட்ட “வாசல்கள்” என்ற சொல் உண்மையிலேயே வல்லமையையும் ஆளுகையையும் குறிப்பிடுகிறது. ஆனபடியால் நரகத்தின் எந்த வல்லமையும், ஆளுகையும் ஒரு பொழுதும் திருச்சபையை மேற்கொள்ள முடியாது.
திருச்சபையானது ஆரம்பத்தில் இருந்தே மிகக்கொடுமையான தாக்குதல்களுக்கு உள்ளாயிருந்தது. ஆனாலும் அவையெல்லாவற்றிலும் இருந்து வெற்றி பெற்றுள்ளது. திருச்சபைக்கு எதிராக எழும்பியவர்கள் அழிவைக்கண்டு மறைந்து போய்விட்டார்கள்.
ஆனால் திருச்சபையோ வெற்றிமீது வெற்றி பெற்று வீர நடைபோடுகிறது. அது ஏனென்றால் தேவ வசனம் தெளிவாக சொல்லுகிறது ; ரோமர் 8:35-37. “உமதுநிமித்தம் எந்நேரமும் கொல்லப்படுகிறோம், அடிக்கப்படும் ஆடுகளைப்போல எண்ணப்படுகிறோம் என்று எழுதியிருக்கிறபடி நேரிட்டாலும், 36. கிறிஸ்துவின் அன்பைவிட்டு நம்மைப் பிரிப்பவன் யார்? உபத்திரவமோ, வியாகுலமோ, துன்பமோ, பசியோ, நிர்வாணமோ, நாசமோசமோ, பட்டயமோ?
இவையெல்லாவற்றிலேயும் நாம் நம்மில் அன்புகூருகிறவராலே முற்றும் ஜெயங்கொள்ளுகிறவர்களாயிருக்கிறோமே”.
நாங்கள் எப்பொழுதும் வெற்றி பெற்றவர்கள். எங்களுக்கு எதிராக எழும்புகிற எந்த எதிர்ப்பையும், எதிரியையும் நொறுங்கடித்து முற்றிலும் ஜெயம்கொள்ளுபவர்களாக இருக்கிறோம்.
இந்த ஆசீர்வாதம் திருச்சபையின்மீது தங்கியிருக்கிறது.
பரிசுத்த ஆவியே திருச்சபையின் பொறுப்பாளராகவும் (Boss) தேவனாகவும் இருக்கிறார். அவர் எங்களுக்குள்ளாகவும், எங்களோடும், எங்களுக்குள்ளும் கிரியைகள் நடப்பிக்கிறார்.
நாங்கள் தோற்றுப்போவது என்பது ஒருபொழுதும் சாத்தியம் இல்லை.
நாங்கள் ஆரம்பிப்பதற்கு முன்பே வெற்றி பெற்றுள்ளோம்.
நாம் இப்பொழுது, முன்பே எழுதிவைத்த தேவ வார்த்தையை நடப்பித்து காண்பிக்கிறோம். அல்லேலூயா!
2 கொரிந்தியர் 2:14. “கிறிஸ்துவுக்குள் எப்பொழுதும் எங்களை வெற்றிசிறக்கப்பண்ணி, ( As trophies of Christ’s victory ) எல்லா இடங்களிலேயும் எங்களைக்கொண்டு அவரை அறிகிற அறிவின் வாசனையை வெளிப்படுத்துகிற தேவனுக்கு ஸ்தோத்திரம்”.
கிறிஸ்து எங்களுக்காக பெற்றுக்கொண்ட வெற்றியின் அடையாளமாகிய வெற்றிக் கிண்ணத்தை கையில் ஏந்தி வெற்றிப்பவனி வருகிறோம்.
தேவையானது ஒன்றே. கிறிஸ்து இயேசு செய்து முடித்ததை நோக்கி உங்கள் முழுக்கவநமும் இருக்கட்டும். அவர் கட்டளையிட்டதை சந்தோசத்தோடு செய்து முடிப்போம்.
அல்லேலூயா!
அறிக்கை
——————
கிறிஸ்துவின் வெற்றி பெற்ற சரீரமான மகிமையான சபையிலே நான் ஒரு அங்கமாக இருக்கிறேன். ஆனபடியினால் என்னதான் நடந்தாலும் நான் அழிக்கப்படமுடியாதவன். நான் எப்பொழுதும் வெற்றி பெறுகிறேன். ஏனென்றால் தேவனுடைய வார்த்தை எல்லாவற்றிற்கும் மேலாக என்னை உயர்த்தி என்னுடைய வெற்றியை உறுதிப்படுத்தியிருக்கிறது. எனக்குள் இருக்கிறவர் உலகத்தில் இருக்கிறவனைக்காட்டிலும் பெரியவராக இருக்கிறார். நான் இப்பொழுதும் எப்பொழுதும் கிறிஸ்துவுடனேகூட ஆளுகை செய்கிறேன். இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே ஆமேன்!
மேலதிக வாசிப்பு
ரோமர் 8:37-39;
1 யோவான் 4:4; 1 கொரிந்தியர் 15:57-58
Thanks 🙏
Pas. Mahen