வியாதிகள் நோய்கள் மீதான கிறிஸ்தவனின் அதிகாரம்

விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்களாவன: என் நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துவார்கள்; நவமான பாஷைகளைப் பேசுவார்கள்;
சர்ப்பங்களை எடுப்பார்கள்; சாவுக்கேதுவான யாதொன்றைக் குடித்தாலும் அது அவர்களைச் சேதப்படுத்தாது; வியாதியஸ்தர்மேல் கைகளை வைப்பார்கள், அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவார்கள் என்றார். (மாற்கு 16:17)

மேலே குறிப்பிட்ட ஆதார வசனமானது எமது தெய்வீக தன்மையை அதிகாரத்தையும், அடையாளங்களையும் தெளிவாக கோடிட்டு காண்பிக்கின்றது. இதில் ஒன்று என்னவென்றால் எல்லா வியாதிகள்மீதும் , நோய்கள்மீதும் எமது ஆளுகையையும், வல்லமையையும் தெரியப்படுத்துகின்றது. நாம் பிசாசுகளை விரட்டியடிக்கும் வல்லமையை மாத்த்திரமல்ல, வியாதிகளையும் நோய்களையும் சுகமாக்கும் வல்லமையையும் பெற்றிருக்கிறோம். இயேசு கிறிஸ்து எங்களை சுகமாக்கும் பரிகாரியாக மாற்றியிருக்கிறார்.
மத்தேயு 10:8 இல் இயேசு கிறிஸ்து இவ்வாறு சொல்லுகின்றார்; “வியாதியுள்ளவர்களைச் சொஸ்தமாக்குங்கள், குஷ்டரோகிகளைச் சுத்தம்பண்ணுங்கள், மரித்தோரை எழுப்புங்கள், பிசாசுகளைத் துரத்துங்கள்; இலவசமாய்ப் பெற்றீர்கள், இலவசமாய்க் கொடுங்கள்
இந்த வசனத்தில் ஒன்றை கவனியுங்கள், எங்களை பார்த்து வியாதியஸ்தர்களை சுகமாக்கும்படி தன்னை நோக்கி விண்ணப்பித்து ஜெபியுங்கள் என்று அவர் சொல்லவில்லை.
அவர் மேலும் லூக்கா 10:19இல் “ இதோ, சர்ப்பங்களையும் தேள்களையும் மிதிக்கவும், சத்துருவினுடைய சகல வல்லமையையும் மேற்கொள்ளவும் உங்களுக்கு அதிகாரங்கொடுக்கிறேன்; ஒன்றும் உங்களைச் சேதப்படுத்தமாட்டாது.”
அவர் எங்களை, சாத்தானை பார்க்கிலும் வல்லமையும், மேன்மையும் அதிகாரமும் உள்ளவர்களாக உருவாக்கி இருக்கிறார். ஜனங்களை அழிக்கும் பெரும்பாலான வியாதிகளுக்கு, நோய்களுக்கு சாத்தானே காரணமாக இருக்கின்றான். நீங்கள் ஒருவேளை இவ்வாறு கேள்வி எழுப்பலாம். இன்னும் கிறித்தவர்கள் ஏன் வியாதியிலும், வருத்தத்திலும், பிசாசின் பிடியிலும் சிக்கி தவிக்க வேண்டும்?
இந்த கேள்விக்கான பதிலை சங்கீதம் 82:5-7 வசனத்தில் தருகிறது. “அறியாமலும் உணராமலும் இருக்கிறார்கள், அந்தகாரத்திலே நடக்கிறார்கள்; தேசத்தின் அஸ்திபாரங்களெல்லாம் அசைகிறது.
நீங்கள் தேவர்கள் என்றும், நீங்களெல்லாரும் உன்னதமானவரின் மக்கள் என்றும் நான் சொல்லியிருந்தேன்.
ஆனாலும் நீங்கள் மனுஷரைப்போலச் செத்து, லோகப்பிரபுக்களில் ஒருவனைப்போல விழுந்துபோவீர்கள்.
பெரும்பாலான கிறிஸ்தவர்கள் தேவனுடைய வார்த்தையை குறித்த அறிவு அற்றவர்களாகவும், நோய்கள், வியாதிகள்மீது தமக்கு அதிகாரம் இருப்பதை அறியாமலும் இருக்கிறார்கள். தம்மிடம் இருக்கின்ற தெய்வீக ஜீவனை குறித்த சிந்தையும் அறிவும் இல்லாமல் இருக்கின்றார்கள்.
இயேசு கிறிஸ்து யோவான் 10:34இல் இவ்வாறு கூறுகின்றார். “இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: தேவர்களாயிருக்கிறீர்கள் என்று நான் சொன்னேன் என்பதாய் உங்கள் வேதத்தில் எழுதியிருக்கவில்லையா?”
மேலும் பேதுரு (2 பேதுரு 1:4) “நாங்கள் தேவ சுபாவத்தில் பங்குள்ளவர்களாக இப்பொழுதே இருக்கின்றோம்” என்று அறிவிக்கின்றார். ரோமர் 8:37இல் நாங்கள் முற்றிலும் ஜெயம்கொண்டவர்கள் என்று வேதம் எங்களைப்பார்த்து சொல்லுகின்றது. உண்மையாகவே நோய்க்களோ, வியாதிகளோ எங்கள் சரீரத்திலே உயிர் வாழவோ, வளரவோ முடியாது. ஏனென்றால் கிறிஸ்துவே எங்கள் மாம்ச சரீரத்தில் ஜீவனாக இருக்கின்றார். மேலும் ரோமர் 8:11இல் “பரிசுத்த ஆவியானவர் எங்கள் சரீரத்துக்கு ஜீவனை தருகின்றவராகவும், உயிர்ப்பிக்கின்றவராகவும் இருக்கின்றார்.” இந்த நிஜமான சத்தியத்தை இன்றே அறிந்து, அதனை முழுமனதோடு ஏற்றுக்கொண்டு, உங்கள் வாழ்வில் இதனை செயல்படுத்துங்கள். ஆல்லேலூயா!

ஜெபம்

அன்பின் தகப்பனே, நீர் கிருபையும், இரக்கமும், நீதியும் பரிசுத்தமும், சத்தியமுமாக இருக்கின்ரீர். உம்முடைய ஜீவனை எனக்கு தந்தபடியினால் நான் இப்பொழுதே முற்றிலும் ஜெயம்கொள்ளுகிறவனாக இருக்கின்றேன். நான் எல்லா வியாதிகளுக்கும் நோய்களுக்கும் மேலாக வாழுகின்றேன். என்னுடைய வாழ்வு மேலானதும், மகிமையினால் நிரம்பியதாகவும் இருக்கிறது. நான் இயேசு கிறிஸ்துவின் ஆளுகையை, அதிகாரத்தை என்னுடைய தினசரி வாழ்விலே வெளிப்படுத்த்துகிறவனாக இருக்கின்றேன்; இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே!
ஆமென்!
மேலதிக வாசிப்பு: லூக்கா 9:2; லூக்கா 10:8-9; மத்தேயு 10:1