விசுவாசத்தில் உறுதியாய் தரித்து நில்லுங்கள் – Pastor Mahen
எங்களுடைய போராயுதங்கள் மாம்சத்துக் கேற்றவைகளாயிராமல், அரண்களை நிர்மூலமாக்குகிறதற்கு தேவபலமுள்ளவைகளாய் இருக்கிறது. (2 கொரிந்தியர் 10:4).
கிறிஸ்தவன் என்பவன் ஒரு சாதாரண மனுஷனை போலல்லாமல் அவனது பார்வையும், அணுகு முறையும் முற்றிலும் வேறுபட்டது. அவன் ஆவிக்குரிய கண்ணோட்டத்தில் தன்னுடைய காரியங்களை நடப்பிக்கின்றான். மிக முக்கியமாக, அவனுடைய விசுவாசத்தை பலவீனப்படுத்த்தும் நோக்கத்தில் தோன்றும் சவால்களை அவன் வெற்றிகரமாக முறியடிப்பதற்கு ஆவிக்குரிய அணுகுமுறையை கடைப்பிடிக்கவேண்டும். நீங்கள் உங்கள் சரீரத்தில் வியாதிக்குட்பட்டிருக்கிறீர்களா? உங்களுக்கு தெரிந்த எல்லாவற்றையும் செய்து முடித்திருந்தாலும் உங்கள் சரீர சுகத்தின் முன்னேற்றம் மிகவும் தாமதமா இருக்கின்றதா?
அல்லது உங்கள் பொருளாதாரத்தில் உங்களுக்கு தெரிந்த எல்லா உத்திகளையும் கடைப்பிடித்திருந்தும் ஆனாலும் நிலைமை மிக மோசமாக போய்க்கொண்டிருக்கிறதா? இனிமேல் அடுத்து என்ன செய்யலாம் என்று கவலையோடு சிந்தித்து கொண்டிருக்கிறீர்களா?
அப்படியான தருணங்களில் உங்கள் விசுவாசத்தில் உறுதியாக தரித்து நில்லுங்கள். ஒன்றை மாத்திரம் நினைவில் வைத்து கொள்ளுங்கள். உங்கள் முன்னேற்றத்தை தடுப்பதற்க்கும், உங்களை அழிப்பதற்கும், கிறிஸ்துவின் நற்செய்தியை உங்களுக்கூடாக வெளிப்படுவதை தடைபண்ணுவதற்கும் ஒரு எதிரி (பிசாசு) எப்பொழுதும் கங்கணம் கட்டிக்கொண்டிருக்கிறான். எபேசியர் 6:10-11 இவ்வாறு சொல்கிறது. “கடைசியாக, என் சகோதரரே, கர்த்தரிலும் அவருடைய சத்துவத்தின் வல்லமையிலும் பலப்படுங்கள். நீங்கள் பிசாசின் தந்திரங்களோடு எதிர்த்துநிற்கத் திராணியுள்ளவர்களாகும்படி, தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தையும் தரித்துக்கொள்ளுங்கள்.”
இங்கே பிசாசின் தந்திரங்கள் என்று குறிப்பிடப்படுவது உங்களுக்கும், திருச்சபைக்கும் எதிரான அவனது வஞ்சகமான திட்டங்களையும், சூழ்ச்சிகளையும் குறிக்கின்றது.
இந்த எதிரியை முறியடிப்பதற்கு பவுலடிகளார் தேவனுடைய சர்வாயுத வர்க்கத்தை அணிந்து கொள்ளும்படிக்கு அறிவுறுத்துகிறார். நீங்கள் முழு சர்வாயுத வர்க்கத்தையும் அணிந்து கொள்ளவில்லை என்றால் எதிரியின் தாக்குதல்களை உங்களால் வெற்றிகரமாக முறியடிக்க முடியாது. இதே அத்தியாயத்தில் 12 வது வசனம் இப்படியாக கூறுகிறது. “ஏனெனில், மாம்சத்தோடும் இரத்தத்தோடுமல்ல, துரைத்தனங்களோடும், அதிகாரங்களோடும், இப்பிரபஞ்சத்தின் அந்தகார லோகாதிபதிகளோடும், வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் நமக்குப் போராட்டம் உண்டு.”
மேலே குறிப்பிட்ட போராட்டம் என்பது நீங்கள் மாம்சத்தில் அவனோடு மல்யுத்தம் செய்வதல்ல. இங்கே எதிரியானவன் எங்களை கிறிஸ்துவின் நற்செய்தியின் வெளிச்சத்தின் பாதையில் இருந்து வஞ்சகமாக திசை திருப்ப முயற்சிப்பதை பற்றி குறிப்பிடுகிறது. ஆனாலும் உங்கள் வாயிலும், இருதயத்திலும் உள்ள தேவ வார்த்தை அவனுடைய திட்டங்கள் எல்லாவற்றையும் தோற்கடித்து எப்பொழுதும் உங்களுக்கு வெற்றியை தருவதாக இருக்கிறது.
யாக்கோபு 4:7 இல் “ஆகையால், தேவனுக்குக் கீழ்ப்படிந்திருங்கள்; பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள், அப்பொழுது அவன் உங்களைவிட்டு ஓடிப்போவான்.”
வெளிப்படுத்துதல் 12:11 இல் பிசாசை எப்படி எதிர்த்து நிற்பது என்பதை கற்றுத்தருகின்றது. “மரணம் நேரிடுகிறதாயிருந்தாலும் அதற்குத் தப்பும்படி தங்கள் ஜீவனையும் பாராமல், ஆட்டுக்குட்டியின் இரத்தத்தினாலும் தங்கள் சாட்சியின் வசனத்தினாலும் அவனை ஜெயித்தார்கள்.”
எதிரி உங்கள் மீது எந்தவிதமான தாக்குதல்களை கொடுத்தாலும் விசுவாசத்தில் உறுதியாய் தரித்திருந்து, எல்லாவற்றிலும் மேலான மிகவும் வல்லமையான இயேசு கிறிஸ்துவின் நாமத்தை பயன்படுத்தி, அவனை தோற்கடித்து, எப்பொழுதும் வெற்றி காணுங்கள். அல்லேலூயா!
ஜெபம்
அன்பின் பரலோக தகப்பனே!
உம்முடைய அருமையான, மேன்மையான வார்த்தையை அனுப்பி இன்று என்னை ஆசீர்வதித்ததற்காக உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம். பிசாசின் தந்திரங்களும், அவனுடைய ஆயுதங்களை குறித்தும் நான் அறிவுடையவனாக இருக்கிறேன். அவனுடைய திட்டங்களுக்கும், செயல்களுக்கும். அனுமதி மறுக்கின்றேன். சாத்தானும், நரகத்தின் சேனைகளும் என் காலடிக்கு கீழாக இருக்கின்றது. எல்லாம் வல்ல இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே ஆமென்!
மேலதிக வாசிப்பு: எபிரேயர் 10:35-39; 1 யோவான் 5:4; 1 யோவான் 5:4; 1 கொரிந்தியர் 15:58
Pastor Mahen