சந்தோஷமாக இருங்கள்; சமாதானப்பிரபு உங்களுக்குள் இருக்கிறார்
நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்; நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்; கர்த்தத்துவம் அவர் தோளின்மேலிருக்கும்; அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக் கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப்பிரபு என்னப்படும். (ஏசாயா 9:6)
மேலே சொன்ன வசனம் எவ்வளவு மேன்மையானது. இயேசு கிறிஸ்துவே எங்களின் சமாதானப்பிரபுவாக இருக்கிறார், அவரே சமாதானத்தின் வெற்றி வீரனாக திகள்கிறார். நீங்கள் எங்கே சமாதானத்தை தேடினாலும், அதனைப்பெற்றுக்கொள்ள எவ்வளதான் முயற்சி செய்தாலும் கிறிஸ்து இயேசுவைத்தவிர வேறெங்கும் உங்கலால் சமாதானத்தை கண்டடைய முடியாது.
யோவான் 14:27 இல் இயேசு கிறிஸ்து சொல்கிறார்
“சமாதானத்தை உங்களுக்கு வைத்துப்போகிறேன், என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன்; உலகம் கொடுக்கிறபிரகாரம் நான் உங்களுக்குக் கொடுக்கிறதில்லை. உங்கள் இருதயம் கலங்காமலும் பயப்படாமலுமிருப்பதாக”. மேலே சொன்ன இயேசு கிறிஸ்துவின் வார்த்தை எங்கள் இருதயத்திற்கு எவ்வளவு ஆறுதலாக இருக்கிறது. அவர் மிகவும் தெளிவாக சொல்லியிருக்கிறார். எந்த சூழ்நிலையிலும் எங்களுடைய இருதயத்தை கலங்குவதற்கோ, பயப்படுவதற்கோ இடம்கொடுக்க கூடாது. ஏனென்றால் உங்கள் வாழ்வை அவர் தம்முடைய சமாதானத்தினால் நிரப்பியுள்ளார்.
இங்கே இவர் சொன்ன சமாதானம் வெறும் அமைதியாகவும் தொந்தரவு இல்லாமலும் இருக்கும் சூழ்நிலையை அல்ல. மாறாக எந்த வித குழப்பமுமில்லாத சமாதானமும், செழிப்புடன் கூடிய முழுமையான இளைப்பாறுதலுமே அவர் உங்களுக்கு தந்திருக்கிறார்.
மேலே சொன்ன வசனத்திலே இயேசு கிறிஸ்து “என்னுடைய சமாதானத்தை உங்களுக்கு எதிர்காலத்திலே தருவேன் என்று சொல்லவில்லை. மாறாக என்னுடைய சமாதானத்தை உங்களுக்கு ஏற்கனவே தந்துவிட்டேன் என்று சொல்லியிருக்கிறார். அந்த சமாதானம் இப்பொழுதே எங்களிடம் இருக்கிறது. என்றும் நிலைத்திருக்கிற சமாதானத்தையும், சந்தோசத்தையும், மற்றும் களிப்பையும் எந்த அரசாங்கத்தாலோ, உலகத்தாலோ, எங்கள் குடும்பத்தாலோ, நண்பர்களாலோ தரமுடியாது. மாறாக கர்த்தராகிய இயேசுவே இவற்றை தரவல்லவராக இருக்கிறார்.
உங்களுடைய வாழ்விலே என்னதான் நடந்தாலும் எதற்கும் கலங்காமல் இருங்கள். முழு நம்பிக்கையோடு இருங்கள். ஏனென்றால் சமாதானத்தின் பிரபுவே உங்களுக்குள் இருக்கிறார். காற்றும் கடலும் கொந்தளித்தபோது இயேசு கிறிஸ்து என்ன செய்தார் என்பதை நினைவூட்டுங்கள். அவர் காற்றையும் கடலையும் ஒரு சொல்லினாலே அமைதியாக்கினார். உங்கள் வாழ்க்கையிலே எந்த பெரிய பிரச்சனையும் அவரை மிஞ்சியதல்ல. உங்களை சுற்றிலும் உள்ள எந்த சூழ்நிலையும் உங்களை நெருக்கினாலும் உள்ளத்திலே ஒன்றைமாத்திரம் உறுதியாக பற்றிக்கொள்ளுங்கள். அது என்னவென்றால் இயேசு கிறிஸ்துவின் சமாதானத்தையே நீங்கள் உங்கள் இருதயத்தில் வைத்திருக்கிறீர்கள். என்ன சூழ்நிலையாக இருந்தாலும் அவருடைய வார்த்தைகளை தைரியத்தோடு பேசுங்கள். அப்பொழுது அங்கே மிகுந்த சமாதானம் உண்டாகும். தேவனுக்கே மகிமை!
அறிக்கை
சமாதானத்தின் பிரபு என் இருதயத்தில் வாசம்பண்ணுகிறார். அவர் எனக்கு நித்திய சந்தோசத்தையும், ஆறுதலையும், செழிப்பையும் எனக்கு தந்திருக்கிறார். என் வாழ்வில் எழும்பும் எந்த போராட்டத்தையும் என்னால் மேற்கொண்டு ஆழுகை செய்ய முடியும். ஏனென்றால் என்னுடைய இருதயம் அவருடைய வார்த்தையிலே தங்கியிருக்கிறது. என்னுடைய பாதையிலே வர வர வெளிச்சம் பிரகாசித்து ஒரு பரிபூரணமான பட்டப்பகலைப்போல என் வாழ்வு ஒளிர் வீசுகிறது. என்னுடைய வெற்றிகள் என்றுமே உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே ஆமேன்!
மேலதிக வாசிப்பு
பிலிப்பியர் 4:6-7; 2 கொரிந்தியர் 4:16-18;
யோவான் 16:33