வெள்ளாட்டுக்கடா, இளங்காளை இவைகளுடைய இரத்தத்தினாலே அல்ல, தம்முடைய சொந்த இரத்தத்தினாலும் ஒரேதரம் மகா பரிசுத்த ஸ்தலத்திலே பிரவேசித்து, நித்திய மீட்பை உண்டுபண்ணினார். (எபிரெயர் 9:12).
பழைய ஏற்பாட்டுக் காலத்தில் முதலாவது பலி செலுத்தியதை வேதம் இவ்வாறு கூறுகிறது.
எபிரேயர் 9:9 “ அந்தக் கூடாரம் இக்காலத்திற்கு உதவுகிற ஒப்பனையாயிருக்கிறது; அதற்கேற்றபடியே செலுத்தப்பட்டுவருகிற காணிக்கைகளும் பலிகளும் ஆராதனை செய்கிறவனுடைய மனச்சாட்சியைப் பூரணப்படுத்தக்கூடாதவைகளாம்.”
பழைய ஏற்பாட்டில் ஆசாரியர்கள் வித்தியாசமான, வேறுவிதமான காணிக்கைகளையும், பலிகளையும் தேவனுக்கு செலுத்திவந்தார்கள்.
அது எப்படியென்றால் எபிரேயர் 9:10 இல் இவைகள் சீர்திருத்தல் உண்டாகும் காலம்வரைக்கும் நடந்தேறும்படி கட்டளையிடப்பட்ட போஜனபானங்களும், பலவித ஸ்நானங்களும், சரீரத்திற்கேற்ற சடங்குகளு மேயல்லாமல் வேறல்ல.“
ஆனால் இயேசு கிறிஸ்து இந்த பூமிக்கு வந்தபோது அவர் தமது சொந்த இரத்தத்தையே பலியாக செலுத்தினார். அவர் தம்மைத்தாமே தியாக பலியாக தாரைவார்த்தார். ஆனால் பழைய ஏற்பாட்டில் ஆசாரியர்களோ வருஷா வருஷம் மறுபடியும் மறுபடியும் பலி செலுத்த வேண்டியதாக இருந்தது. இயேசு கிறிஸ்துவோ ஒரே பலியினாலே மனித குலத்துக்கு வேண்டிய நித்திய மீட்பை உண்டுபண்ணினார்.
முன்னர் செலுத்திய காணிக்கைகள், மிருகஜீவன்களின் இரத்த பலிகள் தேவனுடைய விருப்போ, சிறந்த வழியோ அல்ல.
ஆகையினால் இயேசு கிறிஸ்து இப்படியாக கூறுகின்றார்.
எபிரேயர் 10:7 “ அப்பொழுது நான்: தேவனே, உம்முடைய சித்தத்தின்படி செய்ய, இதோ, வருகிறேன், புஸ்தகச்சுருளில் என்னைக்குறித்து எழுதியிருக்கிறது என்று சொன்னேன் என்றார்.”
பழைய ஏற்பாட்டு ஆசாரியர்களையும் அவர்களின் பலிகளையும் வேதம் இவ்வாறு குறிப்பிடுகின்றது .
எபிரேயர் 10:11-12 இல் “அன்றியும், எந்த ஆசாரியனும் நாடோறும் ஆராதனை செய்கிறவனாயும், பாவங்களை ஒருக்காலும் நிவிர்த்திசெய்யக்கூடாத ஒரேவித பலிகளை அநேகந்தரம் செலுத்திவருகிறவனாயும் நிற்பான்.
இவரோ, (இயேசு கிறிஸ்து ) பாவங்களுக்காக ஒரே பலியைச் செலுத்தி, என்றென்றைக்கும் தேவனுடைய வலதுபாரிசத்தில் உட்கார்ந்து,”
பவுலடிகளார், இரட்சிக்கப்படாத யூத ஜனங்களுக்கு கிறிஸ்துவை பற்றி அறிவிக்கும்பொழுது இப்படி குறிப்பிடுகின்றார். அப்போஸ்தலர் 13:38-39 “ ஆதலால் சகோதரரே, இவர் மூலமாய் உங்களுக்குப் பாவமன்னிப்பு உண்டாகும் என்று அறிவிக்கப்படுகிறதென்றும், மோசேயின் நியாயப்பிரமாணத்தினாலே நீங்கள் எவைகளினின்று விடுதலையாகி நீதிமான்களாக்கப்படக்கூடாதிருந்ததோ, விசுவாசிக்கிறவன் எவனும் அவைகளினின்று இவராலே விடுதலையாகி நீதிமானாக்கப்படுகிறான் என்றும் உங்களுக்குத் தெரிந்திருக்கக்கடவது.”
தேவனுக்கே மகிமை உண்டாவதாக!
இயேசு கிறிஸ்து எல்லா மனிதர்களுக்குமான நித்திய மீட்பை ஒரே பலியினாலே நிரந்தரமாக சுதந்தரித்துக் கொண்டார் என்பதை எல்லா இடங்களிலேயும், எல்லா மனிதர்களுக்கும் அறிவியுங்கள். அல்லேலூயா!
அறிக்கை
—————-
மகிமையும், நீதியும் நிறைந்த அன்பின் தேவனே!
நீர் எங்களுடைய பாவங்ளை சுமந்து உம்முடைய சொந்த இரத்தத்தினால், ஒரேதரம் நிரந்தரமாக கழுவியதற்காக உமக்கு நன்றிகள். எமது பாவத்துக்காக மிகப்பெரிய விலையை செலுத்தினீர். இப்பொழுது நாம் கழுவப்பட்டோம், சுத்திகரிக்கப்பட்டோம், நீதிமான்களாக்கப்பட்டோம். பாவம், மரணம், அழிவின் பிடியிலிருந்து நாம் முற்றுமுழுதாக விடுவிக்கப்பட்டோம். அல்லேலோயா!
இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே!
ஆமென்!
மேலதிக வாசிப்பு: எபிரெயர் 9:11-14; யோவான் 3:16
Thanks Pas. Mahen